வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் (பிப்.15) இரவு தனது வீட்டின் கதவை திறந்துவைத்தபடி தூங்கிக் கொண்டிருந்துள்ளார். இதனைக் கவனித்த இளைஞர் ஒருவர், திடீரென அந்த பெண்ணின் வீட்டிற்கு புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்து அப்பெண் கூச்சலிட்டதால், பயந்துபோன அந்த இளைஞர் ஓட்டம் பிடித்துள்ளான். பின்னர், இதுகுறித்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த பெண் கொடுத்தார். அதன்பேரில் அண்ணாநகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், அப்பகுதியில் பதுங்கியிருந்த இளைஞரை மடக்கிபிடித்த போலீசார், காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (25) என்பதும், அவர் மீது ஏற்கனவே திருமங்கலம், அரும்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி உள்பட சுமார் 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், இரவு நேரங்களில் பலரை மிரட்டி செல்போன் பறித்துள்ள சுப்பிரமணி, அவற்றை மலிவு விலையில் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து சுப்பிரமணி மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.