தவணைத் தொகையை முறையாக கட்டவில்லை என்று நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய சென்ற தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை கிராம மக்கள் கட்டி வைத்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த மழவதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி என்பவர் தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். பல மாதங்களாக லட்சாதிபதி மாதத் தவணை கட்டவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மௌலானா என்பவரும், கடலூர் மாவட்டம் வீராணம் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும், நேற்றிரவு ஒரு மணி அளவில் லட்சாதிபதியின் வீட்டிற்கு சென்று அவரின் இருசக்கர வாகனத்தை தூக்கி செல்ல முயன்றுள்ளனர்.
இதைக்கண்ட கிராம மக்கள், இருவரையும் ஊருக்குள் திருட வந்த திருடன் என நினைத்து அவர்களை கடுமையாக தாக்கி கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை கண்டாச்சிபுரம் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்களா இல்லை வாகனங்களை திருடுவதற்கு வந்த திருடர்களா என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.