மெக்சிக்கோ நாட்டில் திடீரென 20 குழந்தைகள் வரை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், அதில் 13 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணையில், குழந்தைகள் பலியான சம்பவத்தில், காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டது காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக குறிப்பிட்ட ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் குளுக்கோஸ் பாக்கெட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அந்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு மெக்ஸிகோ சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதுவரை குழந்தைகளின் உயிரிழப்புக்கு உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளுக்கோஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தைகளின் மரண அறிக்கையில், அனைத்து விதமான நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தகர்க்கும் க்ளெப்சியெல்லா ஆக்ஸிடோகா என்ற பாக்டீரியா காரணமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இறந்த குழந்தைகள் அனைவருமே ரத்த நாள தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், இதுவரை 20 குழந்தைகளுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 13 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மற்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.