மகாராஷ்டிராவில் அச்சுறுத்தி வந்த குய்லின்-பார் சிண்ட்ரோம் (GBS) என்ற நரம்பியல் கோளாறு நோய் பாதிப்பால் திருவள்ளூரை சேர்ந்த 9 வயது மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் சுற்றுவட்டார பகுதிகளில்,(Guillian-Barre Syndrome) (ஜிபிஎஸ்) என்ற நரம்பியல் கோளாறு நோய் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த நோய், மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம், மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கி வருகிறது. இந்த மர்ம நோயால் இதுவரை புனேவில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து தெலுங்கானாவிலும் இந்நோய் பாதிப்பு பரவியுள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவரது மகன் மைதீஸ்வரன்(9). நான்காம் வகுப்பு படித்து வரும் சிறுவனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன், கால்களில் உணர்விழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். இதையடுத்து, மருத்துவரின் பரிந்துரையின்பேரில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளான். ஆனால், சிகிச்சை பலனின்றி, இரண்டு நாட்களுக்கு முன் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
முன்னதாக சிறுவனுக்கு மேற்கொள்ளபட்ட பரிசோதனையில், குய்லின்-பார் சிண்ட்ரோம் (ஜிபிஎஸ்) என்ற நரம்பியல் கோளாறு நோய் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, மைதீஸ்வரனுக்கு, ‘இம்யூனோகுளோபுலின்’ சிகிச்சை அளிக்கப்பட்டாலும், ஜி.பி.எஸ்., நோயின் தீவிரத்துடன், இதய பாதிப்பும் இருந்ததால் காப்பாற்ற முடியவில்லை என்று விளக்கமளித்துள்ளனர்.
மேலும், ஜி.பி.எஸ்., நோய் என்பது, பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்பு. தரமற்ற உணவு, நீர் மாசுபாடு, நோய் எதிர்ப்பாற்றால் எதிர்வினை பாதிப்பு, மருந்து எதிர்வினை, தடுப்பூசி ஒவ்வாமை உள்ளிட்ட, பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஆகியவை முதற்கட்ட அறிகுறிகள். அந்நோய், உடலின் எதிர்ப்பாற்றலுக்கு எதிராக செயல்பட்டு, தன்னுடல் தாக்குநோயாக உருமாறி, நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது.
இதனால், மூட்டு வலி, முதுகு வலி, கை கால்கள் மரத்துப் போதல், பலவீனமாக உணர்தல், மூச்சு விடுதலில் சிரமம், பேசுதல் மற்றும் விழுங்குவதில் சிரமம் ஏற்படலாம். அதுபோன்ற அறிகுறிகளுடன் ஓரிருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். எனவே, இந்நோய் பற்றி அச்சப்பட வேண்டாம். கொரோனா போல தொற்றுநோய் பாதிப்பில்லை. சிகிச்சை மேற்கொண்டால் பூரணமாக குணமடையும். பாதிக்கப்பட்டவர்களில், 99 சதவீதம் பேர் குணமடைந்து விடுகின்றனர். உடலில் வேறு சில பாதிப்புகளும் இருக்கும்பட்சத்தில், ஓரிருவர் உயிரிழக்க நேரிடுகிறது என்று மருத்துவர்கள் கூறினர்.