ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதர் (வயது 31) நியமிக்கப்பட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, 2021ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போதில் இருந்தே ஆர்சிபி, படுமோசமாக சொதப்பி வருகிறது. கோலிக்கு பிறகு, கேப்டனாக பொறுப்பேற்ற டூ பிளஸி, அணிக்கு 21 வெற்றிகளையும், 42 தோல்விகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இதனால்தான், 18-வது சீசனுக்கான மெகா ஏலத்திற்குமுன், டூ பிளஸியை ஆர்சிபி வெளியேற்றியது.
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 6 பேரை தக்க வைத்தது. மெகா ஏலத்தில் அணியை வழிநடத்தும் எந்த வீரரையும் பெங்களூரு அணி நிர்வாகம் எடுக்கவில்லை. எனவே, விராட் கோலி அல்லது ரஜத் படிதார் இருவரில் ஒருவரையே பெங்களூரு அணி நிர்வாகம் கேப்டனாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.