கர்நாடக மாநில உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது (61).
கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி செப்டம்பர் 6ஆம் தேதி இரவு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக காலமானார். கர்நாடக அரசில் உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் வனத்துறை அமைச்சராக உமேஷ் கட்டி இருந்து வந்தார். அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். உமேஷ் கட்டி பெங்களூருவில் உள்ள டாலர் காலனி குடியிருப்பின் குளியலறையில் மயங்கி கிடந்ததாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவருக்கு நாடித்துடிப்பு இல்லை என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பயணம்…
1961ஆம் ஆண்டு பிறந்த உமேஷ் கட்டி, கர்நாடகாவில் 40 ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருந்த மூத்த தலைவர்களில் ஒருவர். இதுவரை 9 தேர்தல்களில் போட்டியிட்டு 8 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். மறைந்த ஜே.எச். படேலின் அமைச்சரவையில் முதன்முறையாக அமைச்சரானார் உமேஷ் கட்டி. எடியூரப்பா, டி.வி. சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை என 4 பாஜக முதல்வர்களின் கீழ் அமைச்சராக பணியாற்றிய பெருமை உமேஷ் கட்டிக்கு உள்ளது.
உமேஷ் கட்டியின் அரசியல் பிரவேசம் திடீரென நடந்தது. கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டிருந்த உமேஷ் கட்டி, தனது தந்தை விஸ்வநாத் கட்டி இறந்த பிறகு, ஹுக்கேரியில் இருந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். ராமகிருஷ்ண ஹெக்டேவின் தீவிர சீடர், அவர் தனது பொதுவாழ்வில் பாதியை ஜனதா பரிவார் கட்சிகளில் கழித்தார். அவர் 2008ஆம் ஆண்டில் பிஜேபியில் சேர்ந்தார். அவர் 2008 தேர்தலில் ஹுக்கேரியில் இருந்து JD(S) வேட்பாளராக வெற்றி பெற்றார்.
இந்நிலையில், உமேஷ் மறைவு குறித்து பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ”உமேஷ் கட்டி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் எனக்கு சகோதரர் போல் இருந்தார். அவருக்கு இதய நோய் இருப்பது தெரியும். ஆனால், அது அவரின் உயிரைப் பறிக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. மாநில வளர்ச்சிக்காக அவர் நிறைய நன்மைகள் செய்துள்ளார். பல்வேறு துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார். அதிகம் பேசமாட்டார். அவர் ஒரு செயல்வீரர். அவரது மறைவு மாநிலத்திற்கு நிச்சயம் பேரிழப்பு. அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. அவரது இறுதிச் சடங்கு முழு மாநில மரியாதையுடன் நடைபெறும். அவரது இறுதிச் சடங்கு பெலகாவியில் நடைபெறும். அங்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.