வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம், வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
திருநெல்வேலி மாவட்டம் சந்திர புதுகுளத்தில் 1928ஆம் ஆண்டில் பிறந்த வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், வயது முதிர்வின் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இன்று காலமானார். தன்னுடைய 14-வது வயதில் “குமரன் பாட்டு” என்ற கவிதைத் தொகுப்பு மூலம் பிரபலமடைந்த சுப்பு ஆறுமுகம், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் உதவியால் சென்னையில் தங்கி கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை முதன் முதலாக வில்லுப்பாட்டாக பாடினார்.
![பெரும் இழப்பு..!! ’வில்லிசை வேந்தர்’ பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம் காலமானார்..!! பிரபலங்கள் இரங்கல்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/index-4.jpg)
மேலும், கலைவாணரது 19 திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேஷின் ஏறக்குறைய 60 திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதி அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களிலும் பங்களிப்பை வெளிப்படுத்தி வந்தார். மேலும் காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை இப்படி ஏராளமான வில்லுப்பாட்டுகளை இசைத்துள்ளார். அவரது இசைப்பணி காரணமாக வில்லிசை வேந்தர் என போற்றப்படுவதுடன் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது கடந்த 2021ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. இதேபோல் கடந்த 2005ஆம் ஆண்டு மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.