சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”அதிமுக செயற்குழு, பொதுக்குழுவால் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்குகிறது. மதுரை மாநாடு பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. அதிமுக மதுரை மாநாடு போல் இனி யாராலும் நடத்த முடியாது. மதுரை மாநாட்டை விமர்சித்த உதயநிதி ஸ்டாலினால் திமுக இளைஞரணி மாநாட்டை நடத்த முடியவில்லை.
இதனால் இந்த மாநாட்டை பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி, எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. பல சோதனைகளை சந்தித்ததும் அதிமுக தான். அதனை வெற்றியாக்கியதும் அதிமுக தான். தமிழ்நாட்டிலே அதிக தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுக தான். கொரோனா போன்ற காலக்கட்டத்திலும் அதிமுக அரசு மக்களை காத்தது.
ஆனால் செயலற்ற ஆட்சியாக திமுக அரசு உள்ளது. ஊழல் செய்வதில் தான் திமுக சாதனை செய்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் எத்தனை பேர் எங்கு இருப்பார்களோ அங்கு இருப்பார்கள். திமுகவுக்கு இறங்குமுகம் ஏற்பட்டு விட்டது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும். எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலுக்குள் மாற்றம் வரும்” என்று பேசினார்.