பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவராக பதவி வகித்து வந்த பிபேக் தெப்ராய், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் டெப்ராய். 69வது வயதான பிபேக் தெப்ராய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சுமார் 10 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடல் அடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதயத்தில் அடைப்பு உள்ளிட்ட நோய்களால் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் காலமானார். இந்தியப் பொருளாதாரம் குறித்து பல்வேறு ஆய்வுகளைச் செய்துள்ள டெப்ராய், இந்தியப் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
டெப்ராய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிபேக் டெப்ராய் ஒரு சிறந்த அறிஞர்.. பொருளாதாரம், வரலாறு, கலாச்சாரம், அரசியல், ஆன்மிகம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர். இந்தியாவின் அறிவுசார் துறையில் தனி முத்திரை பதித்தவர். பொருளாதாரத்தைத் தாண்டி பழங்கால நூல்கள் குறித்து ஆய்வு செய்வதில் அவருக்கு ஆர்வம் இருந்தது” என்று பதிவிட்டுள்ளார். பத்மஸ்ரீ விருதைப் பெற்ற டெப்ராய், புனேவின் கோகலே அரசியல் மற்றும் பொருளாதாரக் கழகத்தின் தலைவராக இருந்தவர். மேலும், கடந்த 2019 ஜூன் வரை நிதி ஆயோக் உறுப்பினராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.