சாத்தான்குளம் பகுதியில் உள்ள கிரசர் ஆலையில் நன்கொடை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவைச் சார்ந்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிரசர் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நவீன் குமார் என்பவர் மேலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சாத்தான்குளம் மாவட்டம் இடைச்சிவிளை சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின்மாநில இளைஞரணி செயலாளர் பூபதி பாண்டியன் மற்றும் திருச்செந்தூர் சரண் என்ற ஜெய் ஆனந்த் ஆகிய இருவரும் வந்திருக்கின்றனர்.
அப்போது பணியிலிருந்த மேலாளர் நவீன் குமாரிடம் நன்கொடை கேட்டிருக்கின்றனர். அதற்கு பதில் அளித்துள்ள நவீன் குமார் நிறுவனத்தின் ஓனர் வந்ததும் அவரிடம் இருந்து கேட்டு வாங்கிச் செல்லுமாறு கூறியிருக்கிறார். ஆனாலும் இவர்கள் இருவரும் தொடர்ந்து நவீன் குமாரிடம் நன்கொடை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அப்போதும் நிறுவன முதலாளியிடம் வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார் நவீன் குமார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தங்களது கார்களை அந்த நிறுவனத்தின் வாசலில் நிறுத்தி வம்பு செய்து இருக்கின்றனர். மேலும் அங்கு வந்து செல்லும் லாரி ஓட்டுனர்களிடமும் இவர்கள் வரம்பு மீறியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கிரஷர் ஆலை அளித்த புகாரின் பேரில் பூபதி பாண்டியன் மற்றும் ஜெய் ஆனந்த் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அவர்களிடம் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர்.