வரும் 12ஆம் தேதி குஜராத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு பதவியேற்க இருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல சட்டசபைக்கு கடந்த மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதேபோல் குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. காலை குஜராத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. குஜராத் முதலமைச்சர் வேட்பாளரான பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதேபோல் இமாச்சலில் பாஜக முதலமைச்சர் வேட்பாளர் ஜெயராம் தாகூர் முன்னிலையில் உள்ளார். இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

குஜராத்தில் 182 தொகுதிகளில் மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக 149 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 150 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்க உள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையை கடந்து பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல், ”வரும் 12ஆம் தேதி பாஜக தலைமையிலான புதிய அரசு பதவியேற்கிறது. முதலமைச்சர் பூபேந்தி படேல் பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்” என்று தெரிவித்தார்.