பீகாரில் ஆட்சியை கலைத்தது போல் டெல்லியிலும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருக்கிறார். டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தங்களது கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி கட்சியை உடைக்க பாரதிய ஜனதா கட்சி சதி செய்வதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பான குற்றச்சாட்டை பகிர்ந்து இருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். மேலும் தனது கட்சியைச் சார்ந்த எம்எல்ஏக்களுக்கு 25 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும் பரபரப்பான தகவலை பகிர்ந்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது ‘X’ சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்”சமீபத்தில் பாஜக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டு, இன்னும் சில தினங்களில் கெஜ்ரிவாலை கைது செய்வோம் என்று கூறி இருக்கிறார்கள். மேலும் 21 எம் எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்தனர். அதன் பின் டெல்லியில் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்ப்போம். உங்களுக்கு 25 கோடி ரூபாய் தருகிறோம் பாஜக சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுங்கள்” என பேரம் பேசியதாக பரபரப்பான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவாக பதிவு செய்திருக்கும் அவர் பாரதிய ஜனதா கட்சியின் பேரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் “எங்களுடைய 21 எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டதாக அவர்கள் தெரிவித்தாலும், எங்களுடைய தகவலின்படி வெறும் 7 எம்.எல்.ஏக்களை மட்டுமே இதுவரை சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இதற்கு மறுத்து விட்டனர். இதன்படி அவர்கள் மதுபான ஊழலை விசாரிக்க என்னை கைது செய்யவில்லை, டெல்லியில் ஆம் ஆத்மியின் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க, அவர்கள் பல சதி திட்டங்களை தீட்டி இருக்கின்றனர். கடவுளும் மக்களும் எங்களை எப்பொழுதும் ஆதரித்துள்ளனர். எங்களின் எம்எல்ஏக்களும் வலுவான ஒற்றுமையுடன் இருக்கின்றனர். இந்த முறையும் அவர்கள் தங்களது தீய எண்ணங்களில் தோற்று விடுவார்கள்.
டெல்லி மக்களுக்கு எங்களது அரசு எவ்வளவு பணிகளை செய்துள்ளது என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் உருவாக்கிய தடைகளை முறியடித்து நாங்கள் நிறைய சாதனைகளைப் படைத்துள்ளோம். டெல்லியின் மக்கள் ‘ஆம் ஆத்மியை’ மிகவும் நேசிக்கிறார்கள். எனவே தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்கும் அதிகாரம் அவர்களிடம் இல்லை. எனவே போலியான மதுபான ஊழலில் குற்றம் சாட்டி, அவர்களை கைது செய்து அரசை கவிழ்க்க நினைக்கிறார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.