திமுக, அதிமுகவை மிரட்டும் வகையில் தற்போது தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். 2024 தேர்தலுக்கு பின் திமுகவின் 2 பங்கு எம்.எல்.ஏக்கள், அதிமுகவின் 5-ல் 4 பங்கு எம்.எல்.ஏக்களை கொண்டு பாஜக ஆட்சி அமைக்கும் என்பதுதான் கேபி ராமலிங்கத்தின் பரபரப்பு பேட்டி. பாஜகவைப் பொறுத்தவரை எந்த வகையிலாவது ஒரு மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் நோக்கம்.
அதற்காகவே ஆபரேஷன் தாமரையை பல மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக மகாராஷ்டிராவில் சிவசேனாவை இரண்டாக உடைத்தது, தேசியவாத காங்கிரஸை இரண்டாக உடைத்தது. இந்த உடைக்கப்பட்ட அணிகளுடன் இணைந்து புதிய ஆட்சியையும் அமைத்தது, கர்நாடகாவிலும் கூட முன்னர் காங்கிரஸ் – ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு ஆட்சியை கைப்பற்றியது. மத்தியப்பிரதேசத்திலும் இதே பார்முலாவைத்தான் கையில் எடுத்தது. ஆனால், இந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக கணிசமான எம்.எல்.ஏக்களை கையில் வைத்திருந்தது. தமிழ்நாட்டு நிலைமை அப்படியானதும் அல்ல.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி எனும் கனவுக்கு ஏதேனும் ஒரு வகையிலாவது வாய்ப்பான சூழல் இருக்கிறதா? என்பதை கள நிலவரங்களே வெளிப்படையாக சொல்லும். தமிழ்நாட்டில் மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. சட்டசபையில் கட்சிகளின் பலம்: திமுக 133; காங்கிரஸ் 18; சிபிஐ-2, விசிக- 4; சிபிஎம் -2 (மொத்தம் 159). அதிமுக – 66; பாமக- 5; பாஜக -4 (மொத்தம் 75). தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவே, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு நிற்கிறது. பாஜகவுக்கு வெறும் 4 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். ஆட்சியை பிடிக்க பாஜகவுக்கு இன்னும் 110 எம்.எல்.ஏக்கள் தேவை.
திமுக, அதிமுக எம்.எல்.ஏக்களை சரிபாதியாக பிளவுபடுத்தினால் கூட பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது என்பதுதான் கள யதார்த்தம். ஒருவேளை எடப்பாடி பழனிசாமி தவிர எஞ்சிய 65 எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டாலும் கூட பாஜகவால் ஆட்சியமைக்க தேவையான 114 எம்.எல்.ஏக்களைப் பெறவே முடியாது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகியவை பாஜகவுடன் இணைந்து ஆட்சியில் பங்கேற்க சாத்தியமே இல்லை. காங்கிரஸை உடைத்தால் அதிகபட்சம் 9 எம்.எல்.ஏக்கள்தான் கிடைக்கும்.
இப்படி எத்தனை பகீரத முயற்சிகளை பாஜக மேற்கொண்டாலும் கூட அதாவது தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தற்போதைய தமிழ்நாட்டின் களநிலவரத்தில் பாஜக ஆட்சி அமைக்கவே சாத்தியமே இல்லை என்பது மிகவும் வெளிப்படையான யதார்த்தம். இந்த யாதார்த்தங்களை மீறித்தான் கேபி ராமலிங்கம் பேட்டி அளிக்கிறார் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
English Summary : BJP plans to take over power in Tamil Nadu