fbpx

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது..!! மாநில தலைவர் அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!!

நீட் விலக்கு குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நீட் தேர்வு வந்த பிறகே, தமிழ்நாட்டில் சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும், மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால், தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்திற்காக நீட் தேர்வை திமுக எதிர்த்து வருகிறது.

திமுக முன்னாள் அமைச்சர் திரு. ஆற்காடு வீராசாமி, தாங்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் எப்படி பணம் விளையாடுகிறது என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், இன்னும் நீட் எதிர்ப்பு என்று பல நாடகங்கள் நடத்தி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின். அப்படி ஒரு நாடகமான இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழக பாஜக பங்கேற்காது.

ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பாக, தமிழக மக்கள் சார்பில் பாஜக கேட்டிருந்த பல கேள்விகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விகளை மீண்டும் இன்று முதலமைச்சர் முதல்வர் முன்வைக்க விரும்புகிறேன். நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்தியது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு. நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக அரசுக்கு எண்ணம் இருக்கும் என்றால், நீங்கள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும்.

டாஸ்மாக் ஊழல் விசாரணைக்குத் தடை கேட்டும், கள்ளச்சாராய மரணம் குறித்த விசாரணையைத் தடுக்கவும், நீதிமன்றம் செல்லும் நீங்கள், நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல் தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறீர்கள்..? நீட் தேர்வுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான எந்த ஆதாரங்களையும் இதுவரை முன்வைத்திருக்கிறீர்கள்? நீட் தேர்வு வந்த பிறகே, மருத்துவக் கல்வி படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு என்று முதல்வர் பொய் சொல்லி வருகிறார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு இல்லாத, 2007 – 2016 காலகட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 38 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே, மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றனர் என்ற உண்மையை மறைப்பது ஏன்..? அறிவாலயத்தில் இருந்து தயார் செய்து கொடுத்த முன்னாள் நீதிபதி திரு. ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில், நீட் தேர்வுக்கு முன்பாக, கடந்த 2010 – 2014 ஆண்டுகளில், மருத்துவக் கல்வியில் சேர்ந்த தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை என்ன என்பதை ஏன் குறிப்பிடவில்லை?

நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி, ஆண்டு தோறும் அதிகரித்துள்ளது. கடந்த 2024 நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் 8 பேர், தேசிய அளவில் முதலிடம் பிடித்தனர். தமிழகத் தேர்ச்சி விகிதம், தேசிய சராசரியை விட அதிகம் என்பது முதல்வருக்கு தெரியாதா? யாரை ஏமாற்ற இன்னும் நீட் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார். மாவட்டம் தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நோக்கத்தோடு, பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தில் 14 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மருத்துவக் கல்வி இடங்கள், கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் மேலும் பல மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளின் தரத்தைப் பராமரிக்காமல், புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து என்ற நிலைக்குக் கொண்டு சென்றதோடு, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்குக் குறித்த காலத்தில் விண்ணப்பிக்காமல் அலட்சியமாக இருந்தது திமுக அரசு. திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, தமிழக மாணவர்கள் எதிர்காலத்தைக் குழி தோண்டிப் புதைக்க முயற்சி செய்கிறது திமுக என்பதை, முதலமைச்சரால் மறுக்க முடியுமா..?

நீட் தேர்வு மட்டுமல்ல, எந்தத் தேர்வானாலும் நமது மாணவர்கள் சாதனை படைக்கும் திறமை வாய்ந்தவர்கள். ஆண்டுதோறும் நீட் தேர்ச்சி விகிதமே இதற்கு சாட்சி. போதும் முதலமைச்சர் அவர்களே நீட் எதிர்ப்பு என்ற பெயரில், நீங்கள் ஆடும் சுயநல நாடகம். இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்தி விட்டு, தமிழக மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : BREAKING | ரெப்போ வட்டி விகிதம் 0.25%ஆக குறைப்பு..!! வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு..!!

English Summary

State President Annamalai has announced that the BJP will not attend the all -party meeting on the NEET exemption.

Chella

Next Post

வருங்கால மருமகனுடன் மாமியார் ஓட்டம்..!! திருமணத்திற்கு 9 நாட்கள் முன்..! மணமகள் ஷாக்...!

Wed Apr 9 , 2025
Aligarh Shocker: Bride's mother elopes with her would-be son-in-law, 9 days before the wedding

You May Like