தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜாமீன் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போதுதான் தனது துறைகள் குறித்த நியாபகம் வந்துள்ளது. திமுக அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை, வழக்குத் தொடருவோம் என பூச்சாண்டி காட்டி மிரட்டும் தொனியில் பேசுகிறார். அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய தொகை குறித்த கேள்விக்கு மிரட்டும் வகையில் பதிலளித்துள்ளார்.
ஒரு வகையில், அதானி நிறுவனத்துக்கு எந்த கட்டணமும் செலுத்தவில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றால், 2016இல் இருந்து மின்சார வாரியத்துடனான வழக்கு காரணமாக அதானி நிறுவனத்துக்கு வழங்கப்படாமல் இருந்த கட்டணத்தை, திமுக ஆட்சியில் வழங்கியுள்ளதை ஒப்புக்கொண்ட அமைச்சரைப் பாராட்டி ஆக வேண்டும்.
தனது வார்த்தை விளையாட்டின் மூலம் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை மறைக்க முயற்சிக்கிறார். மேல்முறையீட்டு ஆணையத்தின் உத்தரவின்படியே, ரூ.568 கோடி கட்டணம் செலுத்தியதாக கூறும் செந்தில் பாலாஜி, 2019இல் மேல்முறையீட்டு ஆணையத்தின் இதே உத்தரவை, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நிராகரித்ததை மறந்துவிட்டார்.
நடுத்தர மற்றும் நீண்டகால ஒப்பந்தங்கள் அடிப்படையில் மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரூ.3.45 முதல் ரூ.5.31 வரை தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்கள் மூலமாகக் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இந்த தனியார் நிறுவனங்களில் அதானி நிறுவனம் உள்ளதா? இல்லையா? திமுகவின் வரலாறும், ஜாமீன் அமைச்சரின் வரலாறும் உலகறிந்த உண்மை. எனவே, திமுக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கேள்வி எழுவது இயல்பு.
அரசின் தவறுகளுக்கு மக்களின் வரிப்பணத்தை எடுத்துச் செலவிடும்போது, மக்கள் நலன் சார்ந்த கேள்விகள் எழும். அதற்குப் பதிலளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதைவிடுத்து, வழக்குத் தொடருவோம் என்ற உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் பாஜக பணிந்து செல்லாது” என்று பதிவிட்டுள்ளார்.