சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகே பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி சாந்தி (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக கண்ணன், சாந்தி ஆகிய இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தனர். சாந்தி தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும், பாஜகவில் மகளிரணி மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
இத்ற்கிடையே, அஸ்தம்பட்டி பகுதியில் கண்ணனின் தம்பி கருணாநிதி (45) குடும்பத்துடன் வசித்து வருகிறார். கண்ணனும், கருணாநிதியும் ஒன்றாக சேர்ந்து கோரிமேட்டில் சலூன் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கருணாநிதியின் மகள் ராஜேஸ்வரி, அதே பகுதியை சேர்ந்த மோகன்லால் என்ற வாலிபரை காதலித்து கடந்த 13ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளார். மகளின் காதல் திருமணத்துக்கு அண்ணி சாந்தி உதவியதாக கருணாநிதியிடம் சிலர் கூறியிருக்கின்றனர்.
இதனால் அவர் இதுதொடர்பாக அண்ணியிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு அண்ணி சாந்தி வீட்டிற்கு வந்த கருணாநிதி, தனது மகள் காதல் திருமணத்துக்கு நீங்கள் எப்படி உடந்தையாக இருக்கலாம்? எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த கருணாநிதி தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை எடுத்து சாந்தியை கீழே தள்ளி கழுத்தை அறுத்தார்.
பின்னர், அங்கிருந்து கருணாநிதி ஓட்டம் பிடித்தார். இந்நிலையில், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சாந்தியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீஸார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை நடந்த இடத்திற்கு சென்ற போலீஸார் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளி கருணாநிதியை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.