”பீகாரில் வீசும் காற்று வெகு விரைவில் புதுச்சேரியிலும் வீசும், ரங்கசாமி வீட்டுக்கு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மத்திய அரசு 5ஜி அலைக்கற்றை ஏலத்தினால் ரூ.4.50 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பீடு செய்தது. ஆனால், ரூ.1.50 லட்சம் கோடிக்குத்தான் ஏலம்போயுள்ளது. ரூ.3 லட்சம் கோடி அரசுக்கு வரவேண்டிய வருவாய் வரவில்லை. கடந்த காலத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது 2ஜி அலைக்கற்றையில் ஊழல் நடந்ததாக சொன்ன பாஜக தற்போது விசாரணைக்கு தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி அரசு ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கலுக்கு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதுவரை மத்திய அரசின் உள்துறையிடமிருந்து பட்ஜெட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை. கடந்த காலங்களில் மத்திய அரசு அனுமதி தராததால்தான் காலதாமதமாக பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போதைய பட்ஜெட் நிலை என்ன? கூடுதலாக கடந்த பட்ஜெட்டை விட கேட்டுள்ள ரூ.1,200 கோடிக்கு மத்திய அரசு அனுமதி தருமா? என முதல்வர் ரங்கசாமி பதில் தர வேண்டும். பீகாரில் கட்சியை உடைக்க பார்ப்பதாக பாஜக மீது ஐக்கிய ஜனதா தளம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. கூட்டணி அமைத்து கட்சிகளை உடைத்து பாஜக ஆட்சியை உருவாக்குவதுதான் அவர்களின் வேலை. நாகலாந்தில் தொடங்கி மகாராஷ்டிரா வரை பாஜக இதே வேலையைத்தான் செய்து வருகிறது. இதேநிலை புதுச்சேரியிலும் விரைவில் வரும். ரங்கசாமி வீட்டுக்கு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை உடைக்கும் வேலையை பாஜக தொடங்கி விட்டது. பீகாரில் வீசும் காற்று புதுச்சேரியிலும் வெகு விரைவில் வீசும்” என்று நாராயணசாமி கூறினார்.