டெண்டர் செயல்முறையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு, கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒரு நிறுவனம், வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு பினாமிகள் மூலம் கலப்பட நெய்யை வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 2022 ஆம் ஆண்டில் கோயிலின் விவகாரங்களை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் (TTD) போலே பாபா ஆர்கானிக் டெய்ரி பிரைவேட் லிமிடெட் அதன் பிரதிநிதிகளான வைஷ்ணவி டெய்ரி மற்றும் ஏஆர் டெய்ரி மூலம் நெய்யை விநியோகித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2022-ஆம் ஆண்டு, லட்டு தயாரிப்பில் சுமார் 15 ஆயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேருக்கு எதிராக ரிமாண்ட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ரூர்க்கியில் உள்ள போலே பாபா டைரியின் முன்னாள் இயக்குநர்களான பொமில் ஜெயின் மற்றும் பிபின் ஜெயின், பூனம்பாக்கம் வைஷ்ணவி பால் பண்ணையின் தலைமை செயல் அதிகாரி வினய் காந்த் சாவ்தா மற்றும் திண்டுக்கல் ஏ.ஆர் பால் பண்ணையின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரன் ஆகியோர் கைதாகியுள்ளனர்.
போலே பாபா டெய்ரி நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் ஒரு கிலோவுக்கு ரூ.291 என்ற விலையில் TTDக்கு நெய்யை வழங்கி வந்தது. 2022 ஆம் ஆண்டு வரை அது நெய்யை வழங்கி வந்தது. அதன் பின்னர், இவர்கள் விநியோகிக்கும் நெய் திருப்திகரமாக இல்லை எனக் கூறி திருப்பதி தேவஸ்தானம், இவர்களது டெண்டரை நிராகரித்துள்ளது. இருப்பினும், இதன் பினாமி நிறுவனங்களிடமிருந்து தேவஸ்தானம் தொடர்ச்சியாக நெய் வாங்கிக் கொண்டிருந்தது.
2020 ஆம் ஆண்டில் வைஷ்ணவி டெய்ரி நெய் வழங்குவதற்கான டெண்டரை வென்றாலும், மார்ச் 2024 இல் டெண்டரைப் பெறுவதற்கான ஆவணங்களை ஏஆர் டெய்ரி போலியாக தயாரித்ததாகக் கூறப்படுகிறது என்று ரிமாண்ட் அறிக்கை கூறுகிறது. டெண்டர் படி, ஏ.ஆர் டைரி நிறுவனம் நெய்யை விநியோகம் செய்ய வேண்டும். ஆனால், இந்நிறுவனம் வைஷ்ணவி டைரியில் இருந்து நெய்யை வாங்கியுள்ளது. அதன்படி, ஏற்கனவே, தடை செய்யப்பட்ட போலே பாபா நிறுவனத்தில் இருந்து இந்த நெய் பரிமாற்றம் நடைபெற்றது உறுதியாகியுள்ளது.