பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையில் ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் அரங்கேறியிருக்கிறது. ரவுடியின் தலையை தனியாக துண்டித்து அதை ஒரு இடத்திலும், உடலை வேறு இடத்திலும் வீசிவிட்டு கொலையாளிகள் சென்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள செங்கமடை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (36). இவர் மீது ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராமநாதபுரத்தில் பிரபல ரவுடியாகவும் இவர் வலம் வந்துள்ளார். முத்துப்பாண்டி நேரில் கூட வராமல் அவரது பெயரை சொல்லியே பல கட்டப்பஞ்சாயத்துகள் நடத்தி முடிக்கும் அளவுக்கு அவர் ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெயர் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு முத்துப்பாண்டியை காணவில்லை எனத் தெரிகிறது. அவரை அவரது கூட்டாளிகளும், உறவினர்களும் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில், மறுநாள் காலை செங்கமடையில் உள்ள ஒரு வயல்வெளியில் ஒரு தலை இல்லாத ஆண் சடலம் இருப்பதை அந்த கிராம மக்கள் பார்த்துள்ளனர். பின்னர், இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்டு கிடப்பது ரவுடி முத்துப்பாண்டியின் உடல் என்பதை உறுதி செய்தனர்.
பின்னர், அவரது தலை சில கிலோ மீட்டருக்கு அப்பால் வீசப்பட்டிருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்பகை காரணமாகவே ரவுடி முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொலையாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.