திருமணத்திற்கு ஜாதகம் பொருத்தம் பார்ப்பதை விட ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் முக்கியம் என நடிகை சுஹாசினி கருத்து தெரிவித்துள்ளார்.
மருத்துவம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை சுஹாசினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,“கடந்த நான்கைந்து வருடங்களில்தான் தலசீமியா பற்றியே எனக்குத் தெரிய வந்தது.
இதனைக் குறைபாடு என்று சொல்வதை விட, கண்டிஷன் என்றே சொல்லலாம். என்னுடைய வயதுக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் நான் இரத்த தானம் செய்து வருகிறேன்.
தலசீமியா பற்றி நான் பேசுவது தற்செயலான ஒன்றுதான்.
நானெல்லாம் வீட்டில் பார்த்தபடிதான் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஜாதகம் பார்க்கவில்லை. ஆனால், ஒரு சிலர் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். நான் சொல்ல வருவது என்னவென்றால் ஜாதகம், கம்யூனிட்டி, உயரம் என இதெல்லாம் பார்ப்பதை விட ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது எந்த அளவுக்கு முக்கியம் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், மாலத்தீவுகளில் எல்லாம் பொண்ணும் மாப்பிளையும் ரத்தப் பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே மேரேஜ் சர்டிஃபிகேட் தருவார்கள். தலசீமியா பற்றி நிறைய தவறான கருத்துகள் பரவி வருகிறது. அதை எல்லாம் நம்பாமல் உங்கள் மருத்துவர்களுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள். முன்னாடி நாம் எப்படி நம் வீட்டுப் பெரியவர்கள், ஆசிரியர்கள் பேச்சைக் கேட்டு நடந்தோமோ அப்படி இனிமேல் நம் வாழ்க்கை முறையை மருத்துவர்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டும்” என்று நடிகை சுஹாசினி தெரிவித்தார்.
நடிகை சுஹாசினி குறிப்பிட்டு பேசிய ‘தலசீமியா’ என்பது ஒருவகை சிவப்பணுக்கள் குறைபாடாகும். அதாவது மனிதர்களில் அரிதாக சிலருக்கு அவர்களின் உடலில் ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) தேவையான அளவைவிடக் குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் சிவப்பணுக்கள் விரைவாகச் சிதைந்து போவதே. இந்நிகழ்வு சிவப்பணு சிதைதல் (hemolysis) எனப்படுகிறது. பெரும் தலசீமியா கொண்டவர்களுக்குக் கடுமையான ரத்த சோகை இருக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து ரத்தம் செலுத்த வேண்டும்.
Read More: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மர்ம காய்ச்சல்.. கொத்து கொத்தாக 400 பேர் மருத்துவமனையில் அனுமதி!!