பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அங்குள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் இரு வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தான் நாடு இப்போது தேர்தலுக்காக தயாராகி வருகிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருக்கும் போது கடுமையான ராணுவ நடவடிக்கைகளின் மூலம் தீவிரவாதிகளை நாட்டில் இருந்து வெளியேற்றினார். இதனால் பாகிஸ்தானில் பெரும் அளவு தீவிரவாத நடவடிக்கைகள் கட்டுக்குள் இருந்தது. இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அங்கு தீவிரவாத நடவடிக்கைகள் மீண்டும் தலை எடுக்க தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முதல் நாளான இன்று பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் நகரில் சுயேட்சை வேட்பாளரின் அலுவலகத்திற்கு முன் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததோடு 30 பேர் படுகாயம் அடைந்ததாக அப்பகுதியின் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார் . இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரங்களில் கிலா ஃசைபுல்லா நகரில் ஜேயூஐ பிரண்ட் என்ற கட்சியின் அலுவலகத்திற்கு முன் மற்றொரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததோடு 20க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த இரண்டு வெடிகுண்டு தாக்குதல்களுக்கும் இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் தாலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என பாகிஸ்தான் காவல்துறையினரும் பாதுகாப்பு அதிகாரிகளும் சந்தேகிக்கின்றனர். பொதுத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற இந்த இரண்டு பெரிய குண்டுவெடிப்புகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.