ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கொண்டு வரப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கந்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை ஐகோர்ட் வளாகத்திற்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதனைப் படித்த நீதிபதிகள், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது..? இந்த விவகாரத்திற்கு பின்னர் ஐகோர்ட்டின் பாதுகாப்பை பலப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பு, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருபவர்களை சோதனையிடுவது உள்ளிட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வெடிகுண்டு எதுவும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்படவில்லை என வாதிட்டார். இதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்ட வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். இது அனைவரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. எனவே, பாதுகாப்பை பலப்படுத்துவது முக்கியமானது எனக்கூறி இது குறித்து தமிழ்நாடு காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியோர் தங்களது பரிந்துரைகளை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளை மறுநாளுக்கு (ஜனவரி 29) ஒத்திவைத்தனர்.