வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்றைய தினம் 13 தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். பின்னர் அது வெறும் புரளி என தெரியவந்தது. பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்படி, மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல் போலீசை நாட சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. அது குறித்த விவரங்களை தற்போது வெளியிட இயலாது.
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது போன்ற வெடி குண்டு மிரட்டல்கள் தொடர்பான தகவல்கள் வந்தால் பெற்றோர்கள் பதற்றம் அடைய வேண்டியதில்லை. சென்னை பெருநகர காவல்துறையினர் சரியான முறையில் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது” என்று தெரிவித்தார்.