கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்காது என்று முன்னணி உயிரியலாளர் சேகர் மாண்டே தெரிவித்துள்ளார்..
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) முன்னாள் இயக்குநரும், முன்னணி உயிரியலாளருமான சேகர் மாண்டே பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர் “கொரோனா பூஸ்டர் தடுப்பூசியின் நன்மை பற்றிய அறிவியல் சான்றுகள் பலவீனமாக உள்ளன.. எனவே பூஸ்டர் தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்காது.. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி அல்லது பிற மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்..
புதிய மாறுபாடு காரணமாக கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருக்கலாம்.. இருப்பினும், முந்தைய அலைகளில் இருந்ததைப் போல மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்காது என்று நம்புகிறோம்.. தற்போதைய கொரோனா பரவல், முதல் அல்லது 2-வது அலை போல பேரழிவு தரக்கூடியதாக இருக்க வாய்ப்பில்லை..” என்று தெரிவித்தார்..
மேலும் பேசிய அவர் “ எனினும் பொதுமக்கள் அனைவரும் பொதுவான முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுவது அவசியம்.. பூஸ்டர் தடுப்பூசியை பொருட்படுத்தாமல், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது, வீடுகளுக்குள் சரியான காற்றோட்டம் ஆகியவை மூலம் நோய்த்தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.. போதுமான புதிய காற்று சுழற்சி பராமரிக்கப்பட்டால், வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு வியத்தகு அளவில் குறைக்கப்படுகிறது..” என்று தெரிவித்தார்..
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.. ஞாயிற்றுக்கிழமை காலை முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.. இது 184 நாட்களில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. தினசரி நேர்மறை விகிதம் 2.87 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 2.24 சதவீதமாகவும் உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..