மதுரை மாவட்டம் மேலமாசி வீதி பகுதியில் பிரபல நகைக்கடையான பீமா ஜூவல்லர்ஸ் இயங்கி வருகிறது. இந்த கடையின் கீழ்த்தளத்தில் கடந்த 13ஆம் தேதி காலை 10 மணிக்கு வழக்கம் போல கடையை திறந்து, நகைகளை சரிபார்த்த போது மொத்த நகையில் 10 சவரன் குறைந்தது தெரியவந்தது. இதனால், பதறிப்போன ஊழியர்கள், மீண்டும் ஒருமுறை சோதனை செய்தனர். இதில், 10 சவரன் மதிப்பிலான செயின் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடையின் மேலாளர் கார்த்திக் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்தார். அப்போது, நகைக்கடையின் கீழ்த்தளத்தில் கடையில் பணிபுரிந்து வந்த திருச்சியைச் சேர்ந்த அப்துல் பயாஸூக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவர் 10 சவரன் எடையிலான தங்க செயினை எடுத்து விட்டு அதற்கு பதிலாக கவரிங் செயினை வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நகைக்கடை ஊழியரான அப்துல் பயாஸ் மற்றும் அவரது காதலியின் அக்காவான திவ்யா ஆகிய இருவரையும் கைது செய்து திருடப்பட்ட நகையை போலீசார், மீட்டனர். திருடப்பட்ட தங்க நகையை தனது காதலியின் அக்காவான திவ்யா என்பவரிடம் கொடுத்து அனுப்பியதும் விசாரணையில் அம்பலமானது. அப்துல் பயாஸ் கோயம்புத்தூரைச் சேந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், ஆண்டு தோறும் காதலர் தினத்திற்கு அவருக்கு கிஃப்ட் கொடுத்து வந்துள்ளார். இந்தாண்டு நகையை பரிசாக கொடுக்கலாம் என திட்டமிட்ட அவர், திவ்யாவிடம் கடையில் இருந்த 10 பவுன் செயினை போட்டோ எடுத்து அனுப்பி கவரிங் செயின் தயார் பண்ண சொல்லி செயினை இடம் மாற்றியுள்ளார். அதே சமயம் பிப்ரவரி 14ஆம் தேதி தாத்தா இறந்து விட்டதாக கூறி விட்டு கடைக்கு லீவு போட்டு விட்டு சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.