நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அன்னை சத்தியா நகரில் உள்ள வீட்டுவசதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மல்லிகா. இவர், தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தான், இவரது வீட்டிற்குள் புகுந்த இரண்டு இளைஞர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் நகை, ரூ.37 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு ஓடமுயன்றனர்.
அப்போது, மல்லிகா சத்தம் போட்டதால், அங்கிருந்த கொதிக்கும் தண்ணீரை எடுத்து அவர் மீது அந்த இளைஞர்கள் வீசியுள்ளனர். இதையடுத்து, சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அந்த இரண்டு இளைஞர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
அந்த இரண்டு இளைஞர்களுக்கும், மல்லிகாவின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஐஸ்வர்யா, மணிமேகலை ஆகியோருக்கும் தொடர்பு இருந்துள்ளது. மல்லிகா எப்போதும் கழுத்தில் நகைகள் போட்டு நடமாடி வந்ததாகவும், கையில் பணம் வைத்துக்கொண்டு செழிப்புடன் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரிடம் இருக்கும் நகை, பணத்தை கொள்ளையடிக்க ஐஸ்வர்யா, மணிமேகலை ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழக்கமான தூத்துக்குடி விளாத்திகுளத்தை சேர்ந்த அப்துல், சாந்த குமார் ஆகியோரை பள்ளிபாளையம் வரவழைத்து திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 14 சவரன் நகை, ரூ.37,000 பணத்தை பறிமுதல் செய்து மல்லிகாவிடம் ஒப்படைத்தனர்.