அமெரிக்காவில் கருவில் இருந்த குழந்தைக்கு மூளையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.
குழந்தையின் மூளைக்கும் இதயத்திற்கும் ரத்தம் எடுத்துச்செல்லும் ரத்த குழாய் சரியாக வளரவில்லை. அது குழந்தைக்குப் பலவிதமான உடல்நல பிரச்சினைகளை உருவாக்கும். அதைக் கண்டறிந்த மருத்துவர்கள் பாஸ்டனில் உள்ள பிர்ஹம், மகளிர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தனர். குழந்தை பிறக்க இன்னும் சில நாள்களே இருந்த நிலையில் கர்ப்பிணிக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் மூளையில் சில பிரச்சினைகள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி கருவில் இருக்கும் போதே குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தனர். பல மணி நேரம் பல சிக்கல்களுக்கு இடையில் நடந்த அந்த அறுவை சிகிச்சையில் தாயும் சேயும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றப்பட்டனர். அறுவை சிகிச்சை முடிந்த இரண்டு நாள்களுக்கு பிறகு குழந்தை பிறந்தது. குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.