தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்ததால் கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இருப்பினும், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாகவே பீலே உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். புற்றுநோய் மிகவும் முன்னேறி உடலின் சில பாகங்களுக்கு பரவியுள்ளது. மேலும், நுரையீரல், இதய செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பீலேவை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் பீலே-விற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது குடும்பத்தினர் மருத்துவமனையை சூழ்ந்து இருப்பதாகவும் தெரிகிறது.