வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதால், வட தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரை பகுதியை நாளை அதிகாலை கரையை கடக்கும். நாளை கரையை கடந்து பின்னர் அரபிக்கடலை நோக்கி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.