கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்த வாக்குறுதி மிகவும் கவனம் பெற்றது. அதன்படி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் தமிழ்நாடு அரசு விரிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தின் 29 மாவட்டங்களில் 106 முகாம்களில் 19,487 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர்.
அங்கிருக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத்தொகை ரூ.1,000 சென்றடையும் வகையில், அவர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்களை அரசு கேட்டுள்ளது. விவரங்கள் சரிபார்த்த பின் அவர்களுக்கும் இனி மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.