மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஐயங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிவப்பிரியா என்ற இளம் பெண்ணுக்கும், நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராஜபாண்டி என்ற இளைஞருக்கும் நேற்று மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டையில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபத்தில் இரு வீட்டாரின் சம்மதத்துடனும் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.
இதில் மணமகள் சிவப்பிரியா பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருவதுடன் தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்ததாக தெரிகிறது இந்த நிலையில், நேற்று திருமணம் முடிந்த கையுடன் திருமண சீரான பொருட்கள் உடன் தான் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையை திருமண சீராக மணமகள் சிவப்பிரியா புகுந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
முன்னதாக ஜல்லிக்கட்டு காளையை மணமேடையில் ஏற்றி மணமகனுக்கு மணமகள் சிவப்பிரியா அறிமுகம் செய்து வைத்தார் இதனைத் தொடர்ந்து, மணமக்கள் இருவரும் ஜல்லிக்கட்டை காளைக்கு முத்தமிட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். ஜல்லிக்கட்டு குறித்த வழக்கில் சமீபத்தில் நீதிமன்றத்தில் வெற்றி கிடைத்திருக்கின்ற சூழ்நிலையில், தற்போது பழமை மாறாத பாரம்பரியத்துடன் தான் வளர்த்த காளையை புகுந்து வீட்டுக்கு மணமகள் அழைத்துச் சென்றுள்ள சம்பவம் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.