அரூரில் நட்பாக பழகி 15 வயது சிறுமியை நிர்வாண படம் எடுத்து நகை பறித்த தம்பதியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 10ஆவகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு செல்லும் போது அரூரைச் சேர்ந்த தெய்வானை (20) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு மே 7ஆம் தேதி சிறுமியை கடைக்கு போகலாம் எனக்கூறி, தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் தெய்வானை. அங்கு சிறுமியை தெய்வானையின் கணவர் தமிழ்செல்வன் (27) மிரட்டி நிர்வாணமாக்கி செல்போனில் படம் எடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து சிறுமியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஒருவாரம் கழித்து சிறுமியை தொடர்பு கொண்ட தமிழ்ச்செல்வன், நான் கேட்கும் பணம் தராவிட்டால் உன்னுடைய அந்தரங்க போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன சிறுமி தன்னிடம் பணம் இல்லை என கூறி அழுதுள்ளார். அதற்கு வீட்டில் உள்ள நகையை கொடு என தமிழ்ச்செல்வன் கேட்டுள்ளார். வேறு வழியின்றி பெற்றோருக்குத் தெரியாமல் ஐந்தரை பவுன் நகையை எடுத்துவந்து தமிழ்ச்செல்வனிடம் கொடுத்துள்ளார் அந்த சிறுமி.
பின்னர், வீட்டில் இருந்த நகைகள் மாயமானது குறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போதுதான் இப்படி ஒரு சம்பவம் நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், அவரை அழைத்துக் கொண்டு அரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை மிரட்டிய தமிழ்செல்வன் மற்றும் உடந்தையாக இருந்த மனைவி தெய்வானை ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.