பேரறிஞர் அண்ணா குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக கடந்த 11ஆம் தேதி, மதுரை தமிழ் மாநாட்டில் முத்துராமலிங்க தேவரிடம் மன்னிப்பு கேட்டு ஓடி வந்தவர் அண்ணா என்று அண்ணாமலை பேசியது சர்ச்சையானது. இதனையடுத்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாற்று சி.வி.சண்முகம் அண்ணாமலையின் பேரறிஞர் அண்ணா குறித்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
இதனால் அதிமுக- பாஜக இடையே மோதல் நீடித்து வந்த நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன். ஜெயலலிதாவை விமர்சித்து மன்னிப்பு கேட்ட நிலையில் அண்ணாமலை, அண்ணாவை விமர்சித்து கொண்டிருக்கிறார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லாமல் போனால் எங்களுக்கு இழப்பு இல்லை. பாஜக தனித்து நின்றால் நோட்டாவுடன் தான் போட்டி போட வேண்டும். தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பே இல்லை. இதுவரை பாஜக என்கிற வேஸ்ட் லக்கேஜை தூக்கி திரிந்தோம். இன்று தூக்கியெறிந்து விட்டோம். இனி தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றி அதிமுக முடிவு செய்யும். அண்ணாமலையின் தேவையில்லாத பேச்சே இந்தக் கூட்டணி முறிவதற்கு முக்கிய காரணம். அதிமுக தலைமையின் கருத்தையே நான் அறிவிக்கிறேன்” என ஜெயக்குமார் கூறினார்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வரும் நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்று அறிவித்திருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணியை முறுத்துக்கொண்ட அதிமுக அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கும் என்று கேள்வி எழுப்பட்து வருகிறது, இது குறித்து ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெய்குமார் கூறியதாவது, கழக பொதுச்செயலாளர் ஏற்கனவே கூறியது போல் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்றும் தேர்தல் நேரத்தில் தான் பிரதமர் வேட்பாளர் போன்றவைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இல்லை என்பது முழுக்க முழுக்க என்னுடைய சொந்த கருத்து இல்லை, இது கட்சியின் முடிவு, கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடிவு” என்றும் கூறியுள்ளார்.