பெரம்பலூர் மாவட்டம் அரணார் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் மகன் முருகன் (29). இவர், வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது பள்ளி சிறுமி ஒருவர், பல் வலி காரணமாக பெரம்பலூர் செல்ல வேண்டி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முருகன் சிறுமி செல்ல வேண்டிய இடத்தில் இறக்கி விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், சிறுமி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறிய நிலையில், மருத்துவமனைக்குச் செல்லாமல் அருகில் இருந்த வனப்பகுதிக்கு சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் முருகன்.
இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், உடனே சிறுமியை அழைத்துக் கொண்டு பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முருகனே தேடி வந்த நிலையில், இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.