மத்திய பட்ஜெட் 2024இல் ஆந்திர மற்றும் பீகார் மாநிலங்களுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால், இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில், முதன்முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட் 2024ல் ஆந்திராவும் பீகாரும் என்ன பெறுகின்றன..?
* பீகாரில் உள்ள பீர்பைண்டியில் ரூ.21,400 கோடி செலவில் 2400 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் நிலையம் அமைப்பது உள்ளிட்ட மின் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
* பீகாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகள் கட்டப்படும்.
* பீகார் மாநிலத்தில் வெள்ள பாதிப்புகளை தடுக்கவும், பாசனத்திற்காகவும் பல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஆந்திரா மறுசீரமைப்புச் சட்டத்தில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்கள் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தின் மூலதனத்தின் தேவையை உணர்ந்து, சிறப்பு நிதியுதவியை எளிதாக்குவோம்.
* நடப்பு நிதியாண்டில், கூடுதல் தொகையுடன் ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதன் விவசாயிகளின் உயிர்நாடியான போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்தை விரைவாக முடிக்கவும், நிதியுதவி செய்யவும் எங்கள் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இரு மாநில முதல்வர்கள் பாஜக கூட்டணியில் இருப்பதால் அந்த மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டிருப்பதாக எதிர்கட்சிகள் எழுந்து முழக்கமிட்டன. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத நிர்மலா சீதாராமன், தன்னுடைய அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ஆனால், அவ்வப்போது பீகார் குறித்து நிர்மலா சீதாராமன் சில வார்த்தைகளை சொல்லும்போதும் அதே நிலை தொடர்ந்தது. சுற்றுலா துறை அறிவிப்பு வரும்போது பீகார் கோயில் தொடர்பான அறிவிப்பு வந்தபோது எதிர்க்கட்சிகள் மீண்டும் குரல் எழுப்பின.