தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. இந்தியாவில் ஒருபக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்க, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக சமையலில் தவிர்க்க முடியாத தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதாவது சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தாண்டிச் சென்றது. வெங்காயத்தின் விலை 120 ரூபாயை தாண்டிச்சென்றது. போட்டி போட்டு தக்காளி, வெங்காயம் உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்
இந்த நிலையில், சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று காய்கறிகளின் விலை சரிவை சந்தித்துள்ளது. பருவமழை தொடங்கிய போது காய்கறிகளின் விலை உயர்ந்த தொடங்கிய நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை சரிவை சந்திக்கிறது. அதன்படி இன்றைக்கும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.
தக்காளியை பொறுத்தவரை மூட்டை மூட்டையாக வரத்து அதிகரித்துள்ளால் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 4 கிலோ தக்காளி 50 ரூபாய் என்ற அளிவில் கூவி கூவி கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல வெங்காயத்தின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையான வெங்காயத்தின் விலையானது தற்போது 35 முதல் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் மற்ற பச்சை காய்கறிகளின் விலையானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதன்படி, பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 15 முதல் 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Read more ; நறுக்கி வைத்த வெங்காயத்தை மறுநாள் சமையலுக்கு பயன்படுத்துறீங்களா..? – மருத்துவர்கள் எச்சரிக்கை