சென்னையில் தொழிலதிபரை கொடூரமாகக் கொலை செய்த கும்பல் சாலை ஓரத்தில் பிளாஸ்டி பையால் சுற்றி தூக்கி வீசிச் சென்ற கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னை சின்மயா நகர் பகுதியில் நெற்குன்றம் சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் பை ஒன்று கட்டப்பட்டு இருந்தது. இதை அகற்ற சென்ற துப்புரவு பணியாளர்கள் சடலம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்தபோது கை கால்கள் கட்டப்பட்டு , வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் இருந்தது. உடல் முழுவதும் ரத்தக் கறை, பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் படி சடலமாக இருந்த நபர் யார் ? என்று தொடர்ந்து விருகம்பாக்கம் போலீசார் விசாரண நடத்தினர். உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பி போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில் கொலை செய்யப்பட்டவர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பதும் 67 வயதான அவர் , கட்டிடம் கட்டுவதற்கு திட்ட வரைவுகளை அளிக்கும் தனியார் நிறுவனம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் , நேற்று இரவு ஏடிஎம்மில் அதிக அளவு பணம் எடுத்ததாகவும் கூறப்படுகின்றது. கொலையாளிகள் பணத்திற்காக கொலை செய்தார்களா ? அல்லது முன் விரோதம் காரணமா? என்பது குறித்து போலீசார் துப்பு துலக்கி வருகின்றார்கள்.
சென்னையில் நடந்த இந்த பயங்கர கொலை சென்னை வாசிகளை அச்சத்தில் உறையவைத்துள்ளதோடு நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.