2100-ல் சென்னையின் 16% பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகரித்து, பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் என்பது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. இதனால் பல கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால், காலநிலை மாற்றம் முன்னெப்போதையும் விட இப்போது பேராபத்தாக மாறியுள்ளது.. எனவே நமது சுற்றுச்சூழலில் ஏற்படும் கடுமையான மாற்றங்களை காணும் முன், உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்..
இந்நிலையில் கடல் மட்டம் உயர்வால் அடுத்த 100 ஆண்டுகளில் சென்னையில் உள்ள மின் நிலையங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் கடலுக்குள் முழ்கும் அபாயம் உள்ளதாக சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை சி40 அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் “நெகிழ் திறன், உந்துதலுடன் சென்னை” என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலை என்பதை இலக்காக கொண்டு 6 தலைப்புகள் இந்தச் செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் கடல் மட்டம் உயர்வால் சென்னை அதிக பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடல் மட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் 7 செ.மீ உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “ 2100-ம் ஆண்டில் சென்னையில் 16 சதவீத பகுதிகள் கடலில் முழ்கும். கடல் மட்டம் உயர்வால் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். 17 சதவீத அளவில் குடிசைகளில் வாழும் 2.6 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். 2100-ம் ஆண்டில் 28 பேருந்து நிறுத்தங்கள், 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் கடலில் முழ்கும். 4 புறநகர் ரயில் நிலையங்கள் கடலில் முழ்கும்.
2 மின் நிலையங்கள் கடலில் முழ்கும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.