தமிழகத்தின் விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
தமிழகத்தின் விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தேர்தல் தொடர்பான அறிவிக்கை வரும் ஜூன் 14-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு அன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 21-ம் தேதி. மனுக்கள் ஜூன் 24-ம் தேதி பரிசீலிக்கப்படும். போட்டியிட விரும்பாதவர்கள் மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26-ம் தேதி கடைசி நாள். அன்று மாலை வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியாகும்.
ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நடைமுறைகள் ஜூலை 15-ம் தேதி நிறைவு பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், நேற்று முதல் விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு, பிஹார் மாநிலம் ரூபாலி, மேற்கு வங்கம் மாநிலம் ராய்கஞ்ச், ரணகாட் தெற்கு, பாக்தா, மணிக்தலா, தமிழ்நாடு மாநிலம் விக்கிரவாண்டி , மத்திய பிரதேசம் அமர்வாரா, உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத், மங்களாவூர், இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் டேரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய 13 தொகுதிகளுக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.