அரசு நேரடி கொள்முதல் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “நெல்லின் ஆதார விலையை மத்திய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தி உள்ளது. இது அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இம்முறை நெல் கொள்முதல் நிலையங்கள் முன்கூட்டியே செப்டம்பர் மாதம் திறக்கப்படுவதால், ஆதார விலையைச் செப்டம்பர் முதல் தேதி முதலே வழங்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட்ட நெல்லின் ஆதார விலை வழங்கப்படும் என மத்திய அனுமதி வழங்கியுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் திறந்தவெளி நெல் கிடங்குகள் அதிகளவில் உள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல்லை நேரடியாக அரவை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறுவை நெல்லை கொள்முதல் செய்யும் போது தேவையான தார்ப்பாய், சாக்கு உள்ளிட்ட பொருட்களைக் கூடுதலாக வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் இதுவரை ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது நாள்தோறும் 2 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்ட கேள்விக்கு, விவசாயிகளுக்காகவும், பொதுமக்களுக்காகவும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார். எனவே, அரசு நேரடி கொள்முதல் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொகுப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படும் எனக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது. பழைய நடைமுறை தொடரும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் புகார்களைத் தடுப்பதற்காக இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியே டோல் ஃப்ரீ எண்கள் கொடுக்கப்பட உள்ளது. அதில் விவசாயிகள், பொதுமக்கள், அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என அனைவரும் புகார் அளிக்கலாம். புகார்களின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு அதில் பெறப்படும் புகார்கள் மீது வாரம்தோறும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.