சென்னையில் மழை வெள்ளத்திற்கு பிறகு எவ்வித தொற்று நோயும் பரவவில்லை என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”மழை வெள்ளத்திற்கு பிறகு ஏற்படும் நோய் பரவலை தடுப்பதற்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்கள் இருக்கக் கூடிய பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மேலும், கடந்த 23ஆம் தேதி வரை 1.38 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் சென்னையில் அகற்றப்பட்டுள்ளது.
சென்னையில் மழை வெள்ளத்திற்கு பிறகு எந்த தொற்று நோயும் பரவவில்லை. பொதுமக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 66 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 14 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றின் வீரியம் இல்லை. சென்னையில் உள்ள மக்களுக்கு சுத்தமான பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகள் களத்தில் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர். எப்போதும் தண்ணீரை காய்ச்சி குடிப்பதே நல்லது” என்று தெரிவித்தார்.