இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதில், வட அமெரிக்க நாடான கனடாவுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில், போலி ஆவணங்களை சமர்பித்து கனடாவுக்கு வந்த குற்றச்சாட்டில் 700 இந்திய மாணவர்களை அந்நாட்டு அரசு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த விசா ஏஜென்டான பிரிஜேஷ் மிஸ்ரா என்பவர் கனடாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். கனடாவில் உயர்கல்வி சேவைக்கு மாணவர்களை அனுப்பி வைக்கும் நிறுவனத்தை பிரிஜேஷ் நடத்தியுள்ளார்.
இந்த 700 மாணவர்களும் 2018ஆம் ஆண்டு இவர் மூலம் உயர்க்கல்விக்காக கனடா வந்துள்ளனர். 2018-2022 வரை கனடாவில் உயர்கல்வி படிக்க இவர்கள் வந்த நிலையில், படிப்பு முடிந்த பின்னர் PR எனப்படும் நிரந்தர குடியிருப்பு கேட்டு அந்நாட்டு குடியேற்ற துறையிடம் விண்ணப்பித்துள்ளனர். அதுதொடர்பான ஆவணங்களை சோதித்து பார்த்த போது தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து CBSA அதிகாரிகள் இந்த 700 இந்திய மாணவர்களையும் இந்தியா திருப்பி அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளனர். கனடாவில் இப்படி பெருமளவில் மாணவர்கள் மோசடி சம்பவத்தில் சிக்கியுள்ளது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் பிரிஜேஷ் மிஸ்ராவிடம் சுமார் ரூ.20 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் அவரை கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் கனடா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.