கனடிய தூதர்கள் மீதான இந்தியாவின் அடக்குமுறை, நிலைமையை மோசமாக்குகிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ வேதனை தெரிவித்துள்ளார்.
கனடாவில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என்ற கனடாவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்தியா – கனடா இடையேயான உறவு மோசமாகிவருகிறது. இரு நாட்டுக்கும் இடையேயான போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து உடன்பாடுகளும் தற்போது சிக்கலைச் சந்தித்திருக்கின்றன. இந்த விவகாரத்துக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், இந்தியாவிலிருந்து 41 தூதரக அதிகாரிகளை, கனடா திரும்பப்பெற்றது.
இது குறித்து கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி, “இந்தியாவிலிருந்து எங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற நாங்கள் வசதி செய்திருக்கிறோம். அவர்களின் குடும்பத்தினரும் இப்போது வெளியேறிவிட்டனர். 41 தூதர்களை ஒரே நேரத்தில் வெளியேற்றுவது இதுவே முதன்முறை. இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் திட்டமில்லை. இரு நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் நிலைமை மோசமாகாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டது. கனடா, சர்வதேசச் சட்டத்தைத் தொடர்ந்து பாதுகாக்கும். இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். இந்தியாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “இந்தியாவிலும் கனடாவிலுமுள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு நம்ப முடியாத அளவுக்குக் கடினமாக்குகிறது. மேலும், அரசின் அடிப்படைக் கொள்கையை மீறிச் செயல்படுகிறார்கள். மில்லியன் கணக்கான கனடியர்களின் நல்வாழ்வு, மகிழ்ச்சிக்காக மிகவும் அக்கறை கொண்டதால்தான் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துப் பேசுகிறோம். கனடாவின் தூதரக அதிகாரிகள் சிலர் வெளியேற்றப்படுவது பயணத்துக்கும் வர்த்தகத்துக்கும் இடையூறாக இருக்கும். கனடியத் தூதர்கள் மீதான இந்தியாவின் அடக்குமுறை, நிலைமையை மோசமாக்குகிறது.
கனடாவில் படிக்கும் இந்தியர்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்தும். சுமார் இரண்டு மில்லியன் கனடியர்களின் மொத்த மக்கள்தொகையில் 5 சதவிகிதம் இந்தியப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். கனடாவின் உலகளாவிய மாணவர்களின் மிகப்பெரிய ஆதாரமாக இந்தியாவே திகழ்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.