அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டு குறித்து பேசியபோது நாய், பேய், சாராய வியாபாரிக்கெல்லாம் தன்னால் பதிலளிக்க முடியாது என அண்ணாமலை விமர்சித்தார்.
தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”திமுகவின் இந்தி எதிர்ப்பு என்பது ஆங்கிலம் வேண்டும் என்பதற்காகவே தவிர தமிழ் வேண்டும் என்பதற்காக அல்ல. கடந்த ஆண்டு நடைபெற்ற 10-வது தேர்வு முடிவில் தமிழில் 48 ஆயிரம் பேர் தோல்வியடைந்தனர். இது சரித்திரத்தில் முதல் முறை. எமி ஜாக்சன், ஹன்சிகா மோத்வானி ஆகியோருடன் திமுகவின் பட்டத்து இளவரசர் அடுத்தடுத்து படங்களை நடித்தார். தமிழில் உள்ள ஒரு சகோதரியுடன் கூட நடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா?. இந்தி திணிப்பு என தமிழை அழிக்க திமுக முயற்சித்தால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”கோவையில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை வாய் திறந்து பேச மறுக்கின்றார். தற்கொலைப் படை தாக்குதலை சிலிண்டர் கேஸ் வெடித்து என கூறப்பட்டது வெட்கக்கேடானது. சாதி அரசியலும் மத அரசியலும் தமிழகத்தில் எடுபடாது. திமுக இத்தனை ஆண்டுகள் தமிழை வைத்து வியாபாரம் செய்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்த அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில் நாய், பேய், சாராய வியாபாரிக்கெல்லாம் தன்னால் பதிலளிக்க முடியாது எனக்கூறி அண்ணாமலை புறப்பட்டார். மேலும், பேட்டி கேட்ட செய்தியாளர்களை ’குரங்குகள் போல் ஏன் தாவித்தாவி வருகிறீர்கள்’ என தரக்குறைவாக பேசினார்.