உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததில் இருந்து ரசிகர்கள் கேப்டன் ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கேப்டன் பொறுப்பிலிருந்து அவரை மாற்ற வேண்டும் என பல தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு பெரும் அழுத்தத்தில் இருந்துவரும் ரோகித் சர்மா தன்னுடைய கேப்டன் பொறுப்பை துறக்கும் முடிவிற்கு வந்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் உலகக் கோப்பைத் தொடர் நெருங்கி வருவதால், பிசிசிஐ எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.
கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றிலேயே வெளியேறியது. இதனை அடுத்து 2022 டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் படுதோல்வியை தழுவி நடையை கட்டியது. தற்போது 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வரை இந்திய அணி வந்தது. ஆனால் அதிலும் ரோகித் படை தோல்வியையே சந்தித்திருக்கிறது. இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மட்டும் தான் தற்போது எஞ்சி இருக்கிறது. இதிலாவது ரோகித் சாதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.