திருப்பத்தூர் அருகே மற்றபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (27). இவர், கோவை மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நூல் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஆதிலட்சுமி (22) என்பவருடன் காதல் ஏற்பட்டு, திருமணமும் செய்து கொண்டார். முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆதிலட்சுமியின் பெற்றோர், பின்னர் சமாதானம் அடைந்து 20 சவரன் நகை மற்றும் இரு சக்கர வாகனத்தை மருமகனுக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளனர். திருமணம் நடந்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், இவர்களுக்கு குழந்தை இல்லை என்று காரணம் காட்டி அடிக்கடி ஆதிலட்சுமியின் கணவர் குடும்பத்தினர் சண்டையிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆதிலட்சுமி சமையல் செய்வதில் தாமதப்படுத்தியதாக கூறி மீண்டும் சண்டையிட்டு உள்ளனர். இதனால் விரக்தி அடைந்த ஆதிலட்சுமி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த ஆதிலட்சுமியின் பெற்றோர் தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், ஆதிலட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், இந்த வழக்கின் விசாரணை திருப்பத்துார் சப் – கலெக்டருக்கு மாற்றப்பட்டுள்ளது.