சென்னை பூவிருந்தவல்லியில் பிரபல ரவுடியும், பாஜக பிரமுகமான ஊராட்சி மன்ற தலைவர் பிபிஜிடி சங்கர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிபிஜிடி சங்கர்.
பிரபல ரவுடியான இவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வளர்பிறை ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவில் எஸ்சி/எஸ்டி மாநில பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், காரில் சென்னையில் இருந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த மர்ம கும்பல் காரின் மீது நாட்டு வெடி குண்டு வீசியுள்ளனர். இதில் நிலை குலைந்த கார் சிறிது தூரத்தில் நின்றது.
பின்னர் காரில் இருந்து வெளியேறிய பிபிஜிடி சங்கர் சாலையில் ஓடியுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த மற்றொரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் சங்கரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். மக்கள் அதிகம் கூடும் பகுதியில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொலையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பிபிஜிடி சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பாதுகாப்பிற்காக 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.