கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசுப் பேருந்துடன் கார் மோதியதில், காரில் பயணித்த ஐந்து பேர் விபத்தில் உயிரிழந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசமான விபத்தில், காரில் இருந்த செல்வராஜ், அவரது மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் மற்றும் ஓட்டுநர் விஷ்ணு (ஈரோடு மாவட்டம், வில்லரசன்பட்டி) ஆகியோர் உயிரிழந்தனர்.
விபத்தையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த குளித்தலை காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்க முயன்றனர். ஆனால், கார் பேருந்தின் கீழ் சிக்கியதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்தபிறகு ஒரு மணி நேரம் போராடி, இடிபாடுகளுக்குள் சிக்கிய ஐந்து பேரின் உடல்களையும் மீட்டனர்.
மீட்கப்பட்ட உடல்களை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், விபத்து குறித்து செல்வராஜின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரை சேர்ந்த செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் ஒரத்தநாடு அருகே கீழையூரில் அமைந்துள்ள அக்னி வீரனார் கோயிலுக்கு செல்வதற்காக காரில் பயணித்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை அறிய சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததா? அல்லது பேருந்து ஓட்டுநரின் தவறா? என்பதற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகாலையில் கரூரில் நடந்த இந்த சம்பவம், அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.