இந்தி திணிப்பு எதிர்ப்பை வலியுறுத்தி தமிழகத்தில் திமுக போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திமுக சட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையிலான திமுகவினர் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மையால் அழித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ரயில்வே சேவா என்ற எக்ஸ் இணையதள பக்கத்தில் சிலர் புகார் கூறி இருந்தனர். உடனடியாக ரயில்வே சேவா அமைப்பினர் இது தொடர்பாக பாலக்காடு ரயில்வே டிவிஷன் ஆர்பிஎஃப் போலீசுக்கு புகார் கொடுத்தனர். இதனை அடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த பாலக்காடு டிவிஷன் ஆர்பிஎப் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அழிக்கப்பட்ட ஹிந்தி எழுத்துக்களை ஒரு மணி நேரத்தில் மீண்டும் பழையபடி மாற்றி அமைத்தனர்.
இதையடுத்து பொள்ளாச்சி ரயில் நிலைய அதிகாரிகள் சார்பில் தி.மு.க.,வினர் 4 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 3 பிரிவுகளில் வழக்கும் பதியப்பட்டுள்ளது. பெயர் பலகை மீண்டும் பழைய நிலைக்கு சரி செய்யப்பட்டுள்ளதாகவும், ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல, பாளையங்கோட்டை ரயில் நிலையம் சார்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாஜக திமுக இடையிலான இந்தி வேண்டும், வேண்டாம் என்ற போராட்டம் நாளுக்கு நாள் இரு கட்சிகளுக்கிடையே பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது
Read more : போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்.. அடுத்த போப் யார்? வெளியான தகவல்!