Hawala: சென்னையில் ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் அலுவலகம் ஒன்றில் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளே சென்னையில் சுமார் 1.42 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். அதாவது சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் பெரியளவில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பூக்கடை உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தியதில் ரூ. 1.42 கோடி பணத்தைப் பறிமுதல் செய்தனர். அங்கே இருந்த 3 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை வைத்திருந்ததற்காக அந்த மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பணத்தை வைத்திருந்த யாசர் அரபாத் என்பதும் மற்றொருவர் அதனை வாங்க வந்த ஜெயின் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், அங்கே இருந்த மற்றொரு நபரையும் பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் கைப்பற்றப்பட்ட பணத்தை வருமான வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.